×

ஆன்மிகம் பிட்ஸ்: கோயிலில் இருந்து வெளியில் வரும்போது தர்மம் செய்வது சரியா ? தவறா?

கடவுள் அன்புமயமானவர் என்கிறார்கள். ஆனால், சில கடவுள்கள் உதாரணமாக காளி, துர்க்கை, நரசிம்மர், காட்டேரி, சாமுண்டி, அய்யனார் போன்ற சிலைகள் பயமுறுத்தும் தோற்றத்தில் உள்ளனவே! அன்புமயமான கடவுள் இப்படி அச்சமூட்டும் உருவத்தில் ஏன் தோன்றுகிறார்கள்?
– சுமதி சடகோபன், திருவாமாத்தூர்.

குழந்தைகள் தவறு செய்யக் கூடாது என்பதற்காக, ‘சாமி கண்ணைக் குத்திடும்’ என்று பயமுறுத்தி வைத்த பாரம்பரிய வழக்கம் ஒன்று இருந்தது. இப்போதும், சில வீடுகளில் அந்தப் பழக்கத்தைக் கடைப் பிடிக்கிறார்கள். கடவுளின் கருணை காரணமாக, அவர் நேரடியாக நமக்கு தரிசனம் தருவதில்லை என்பதற்காக, அவர் மீதான மதிப்பும், மரியாதையும் குறைந்துவிடக் கூடாது; அவர் மீது பயம் தோன்ற வேண்டும். அப்போதுதான், அவர் மீதான பக்தி வளரும் என்பது சிலருடைய வாதம். அந்த வகையில், கடவுள் உருவங்களை பயம் தோன்றும்படியாக வடிவமைத்திருப்பார்கள் என்றும் சொல்வார்கள். ஆனால், கடவுள் தீயவைகளை அழிக்கக் கூடியவர். எங்கெங்கெல்லாம் தீமை முளைக்கிறதோ அங்கெங்கெல்லாம் இறைவன் தோன்றுகிறார்.

அப்படி அழித்த பிறகு, அவர் தோன்றிய உருவத்திலேயே சிலையாக மாறி, அந்தப் பகுதி மக்களுக்குத் தொடர்ந்து நல்வழி காட்டுகிறார். அதுமட்டுமல்ல, அந்த கடவுள் உருவங்களை பார்க்கும்போது, மனம் சலனப்பட்டு தவறான வழியில் போக முயற்சிசெய்பவர்கள் கடவுள் நம்மை தண்டித்துவிடுவார் என்று பயந்து அந்த எண்ணத்தையே மாற்றிக் கொண்டு விடவும் வாய்ப்புள்ளது. இரண்யனுக்கு கொடியவராகத் தெரிந்த நரசிம்மர், பிரகலாதனுக்கு இனியவராகத் தெரியவில்லையா?

கோயிலுக்குள் சென்று இறை வழிபாடு செய்துவிட்டு வெளியே வரும்போது கோயில் வாசலில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு தர்மம் செய்வது நல்லதா?
– துரைவேல் பாண்டி, திருப்பாச்சேத்தி.

தர்மம் செய்வது என்பது ஒரு நற்பண்பு. இல்லாதவர்களுக்கு, இருப்பவர்கள் முடிந்ததை வழங்கி அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் அரிய பண்பு. கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசித்துவிட்டு, மனம் நிறைந்த அருள் பெற்று திரும்பும்போது அந்த நிறைவில் யாசகம் கேட்போருக்கு இயன்றளவு தர்மம் செய்வது இயல்பாகவே ஏற்பட்டுவிடும். ஓட்டலுக்குப் போய் நாம் காசு செலவழித்து சாப்பிட்டுவிட்டு, அந்த சேவைக்காக சம்பளம் வாங்கும் சர்வருக்கே நாம் டிப்ஸ் கொடுக்கிறோமே, அது வயிறு நிறைந்துவிட்ட மகிழ்ச்சியால்தானே? (சிலர் வேதனையோடு கொடுப்பதும் உண்டு).

சிலர் கோயிலுக்குள் போகும் முன் பிச்சைக்காரர்களுக்கு தர்மம் செய்துவிட வேண்டும், இறைவனை தரிசனம் செய்துவிட்டு, அதன்பிறகு தர்மம் செய்தால் நாம் சேகரித்துக் கொண்டு வந்த அருள், அந்த தர்மம் வழியாக நம் கைவிட்டுப் போய்விடும் என்றும் சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். சிரிப்புதான் வருகிறது. தர்மம் செய்வது என்று தீர்மானித்துக் கொண்டபிறகு, முதலிலேயே போட்டால் என்ன, அப்புறம்தான் போட்டால் என்ன? இந்த தர்ம சிந்தனைக்கே இறைவன் அருள் நிலைத்து நிற்கும். அதனால் இறைவனை வழிபட்ட பிறகு மனநிறைவோடு தர்மம் செய்வது சிறந்தது, சரியானது.

தீய கனவுகள் வருகின்றன. எப்படித் தவிர்ப்பது? அது ஏதேனும் அச்சானியத்தின் அறிகுறியா?
– எஸ்.பி.தளவாய் பூபதி, விழுப்புரம்.

மனதில் குழப்பங்கள் சேராமல் பார்த்துக்கொள்ளுங்கள். தினசரி நடவடிக்கைகளில் யாருக்கும் தீங்கு நினையாதிருக்கப் பழகுங்கள். முயற்சிகள் தோல்வியுற்றால், துவளாமல், வேதனையில் ஆழ்ந்துபோகாமல், அமைதியாக மேலும் நல்முயற்சிகளை மேற்கொள்ளப் பாருங்கள். வெற்றி கண்டுவிட்டால் அதனை ஆரவாரமாகக் கொண்டாடாதீர்கள். அது பிறர் பொறாமைக்கு வழிவகுக்கும்.

உங்கள் திறமைக்குக் கிடைத்த வெற்றிதான் என்றாலும், அதை எல்லோரும் சகித்துக் கொள்வார்கள், ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே நல்லதோ, கெட்டதோ இரண்டையும் ஒரே மாதிரி பாவிக்கப் பழகுங்கள். இந்த மனப் பழக்கத்திற்கு பிராணாயாமம், தியானம், யோகா என்று பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. மனம் அமைதியுற்றால் தீய கனவுகள் கிட்டவே நெருங்காது.

அமைதியுறும் மனம், பிறருக்குத் தீங்கு நினைக்காது என்பதால் எப்போதும் நற்சிந்தனைகளுடனேயே இருக்கும். ஆகவே, கனவுகள் தூக்கத்தில் துன்புறுத்தாது. இத்தகைய மனநலப் பயிற்சிக்கு முதல்படியாக, இரவு உறங்குமுன் ஒருசில வினாடிகள் இறைவனை உளமார நினைத்துவிட்டு, சிறிது விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டு, உறங்கப் போகலாம்.

The post ஆன்மிகம் பிட்ஸ்: கோயிலில் இருந்து வெளியில் வரும்போது தர்மம் செய்வது சரியா ? தவறா? appeared first on Dinakaran.

Tags : God ,Kali ,Turkey ,Narasimmer ,Vampire ,Samundi ,Ayanar ,
× RELATED இதயம் காணும் இறைவன்